Friday, April 27, 2018

கள்ளவாளி என்னும் கடவுள்

கள்ளவாளி எனும் கடவுள் .
***********************************
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா சாயல்குடி அருகே உள்ளது எஸ்.டி.சேதுராஜபுரம் என்ற கிராமம் .இந்த கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இவர்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும்.தொடர் வறட்சியின் காரணமாக சிலர் வளைகுடா நாடுகளிலும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த ஊரில் இருந்து வடக்கே சுமார் 1 கிலோமீட்டர் தூரத்தில் கொக்காடி செல்லும் ரோட்டில் கீழக்குளம் கண்மாய்க்கு அருகில் சமண தீர்த்தங்கரர் வடிவத்தை ஒத்த ஒரு கல்சிலையானது தவக்கோலத்தில் அமைந்து உள்ளது.இவ்வூர் மக்கள்
இந்த சிலையை கள்ளவாளி சிலை என்று பெயரில் வணங்குகின்றனர்.எஸ்.டி.சேதுராஜபுரம் கிராம மக்கள் விவசாயம் ஆரம்பிக்கிற மாதங்களில் இந்த கள்ளவாளி சிலையை வணங்கி விட்டேநெல்,மிளகாய்,தோட்டபயிர்களை பயிரிடுகின்றனர்.அதே போலவே விளைச்சல் கிடைத்ததும் நெல்,மிளகாய் போன்றவற்றை கள்ளவாளிக்கு காணிக்கையாக செலுத்துவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
அவ்வூரை சேர்ந்த #கோபிநாத் என்ற கல்லூரி மாணவர் இது பற்றி பேசும் போது''கமுதி முதல் திருப்புல்லாணி வரையிலான பகுதிகளில் 9 ம் நூற்றாண்டு முதல் 12 ம் நூற்றாண்டு வரையில் சமண மதம் சிறப்புற்று விளங்கியதாக படித்திருக்கிறேன்.எங்கள் ஊரில் காணப்படும் இந்த கள்ளவாளி சிலையானது மகாவீரர் அல்லது ஆதிநாதராக கூட இருக்கலாம் என நினைக்கிறேன்.மேலும் முன்னொரு காலத்தில் இந்த பகுதியில் ஏ.நெடுங்குளம் என்ற பெயரில் கிராமம் ஒன்று இருந்ததாகவும் தெரிய வருகிறது.எனவே இது தொடர்பான தொல்லியல் ஆய்வுகள் நடத்துவது அவசியம்' என்றார்.
ஆனால்இது தொடர்பாக விளக்கும் தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு அவர்கள், "இது சமண தீர்த்தங்கரர் அல்ல,என்றதோடு மகாவீரரின் பீடத்தில் சிங்கமும் ,ஆதி நாதருக்கு காளையும்இருக்கும்.இதில் அவ்வாறு இல்லாததால் இது மிக சமீபத்திய சிலையாக கூட இருக்கலாம்" என்கிறார்.
மேலும் கள்ளவாளி என்பதற்கு திருடன் எனவும் ஒரு அர்த்தம் உள்ளதாகவும் சொல்கிறார்கள்.
#ஜெ.#தங்கமுனியசாமி

ஒரு கேள்வி


வறட்சியின் கோரப் பிடியில்
சிக்கி சின்னாபின்னமானது
பெருந்துயரம் .
ஆனால் நிறைந்து கொண்டு இருக்கிறது.
ஊழல் பெருச்சாளிகள் ,
மொள்ளமாரிகள்
முடிச்சவிக்கிகளால்.
பிணத்தின் நெற்றியிலும்
கூட காசு எடுத்தவனால்,
வாய்க்கரிசி கேட்பவர்களால் ,
ஆம்.நிறையவே நிறைந்து கொண்டு இருக்கிறது
அரசின் அனைத்து துறையிலும்
கடைந்தெடுத்த அயோக்கியர்களை
எம்மக்களுக்கு சேவை செய்யவென ,
எங்கெங்கிருந்தோ தூக்கி போடுகிறார்கள்
ஆகவே கனவான்களே!
இயற்கையால் வஞ்சிக்கப்பட்டவர்களின்
ஏக பிரதிநிதியாய் இறைஞ்சிக் கேட்கிறேன்..
ஒரே ஒரு கேள்வி...
தண்டனைக்குள்ளான அரசாங்க ஆபிசர்களை
ராமநாதபுரத்திற்கு பணிமாறுதல் செய்கின்றீர்களே
#உண்மையில் #தண்டனை #யாருக்கு?
துரோக வாளை கூர் தீட்டி,
சிரிப்பை அள்ளி வீசியெறிந்து,
பிள்ளைக்கறி தின்னும் 
கொலைகார குள்ளநரிக் கூட்டமொன்றின்
கால் பிடித்து நடை பழகும் அபலை
ஆட்டுகுட்டியின் நம்பிக்கை போன்றே
கோட்டி பிடித்து அலைகிறது மனம்.

Monday, August 22, 2011

KAINGNAR KASI AANANTHAN

உச்சிதனை முகர்ந்தால், உள்ளங்கால் வரை சிலிர்க்குதடி என்ற பாடல், ஒரு மிகச் சிறந்த மெலடி.  இந்தப் பாடலின் வரிகளும், இருப்பாய் தமிழா நெருப்பாய் என்ற பாடலின் வரிகளையும் வடித்த காசி ஆனந்தன்,  பாடலைக் கேட்கையில் இப்பாடல் வரிகளின் சுவையால், தமிழ் என் தாய் மொழி என நினைத்து பெருமைப் பட வைக்கிறார்.

அந்தப் பாடலின் வரிகளோடு முடிப்பது பொருத்தமே…

இருப்பாய் தமிழா நெருப்பாய்  நீ….
இழிவாய் கிடக்க செருப்பா நீ….
ஓங்கி ஓங்கி புயல் அடிக்கிறதே…
ஒரு தீபம் அணையும் முன்னே துடிக்கிதே…
துடித்துத் துடித்து உடல் சிதைகிறதே….
தினம் பிணங்கள் பிணங்களாய் புதைகிறதே….
என் பிள்ளையை மண்ணில் புதைப்பார்கள்…
அவள் தாய் மண்ணை அவர்கள் எங்கே புதைப்பார்கள்…….

Saturday, August 20, 2011

pa vijay kavithai

திங்கள், டிசம்பர் 04, 2006

புத்தனின் போதிமரத்தில் தொங்கும் உடல்கள்!

 


இப்போதெல்லாம் தமிழகம் எங்கும் எரியத்தொடங்கியிருக்கும் உணர்வுக்கொந்தளிப்புக்கு ஒரு சாட்சி இந்தக் கவிதை தமிழன் கோவம் கொண்டிருக்கிறான்.'ஈழத்தமிழரை ஆதரிப்பது தவறெண்டால் அந்த தவறைத் தொடர்ந்து செய்வோம்' என்ற கலைஞரின் கோவத்தைப் போல உணர்வுள்ள தாய் தமிழ் மண்ணின் எல்லா மனிதரும் வீறுகொண்டு எழுந்தால் ஈழத்தமிழருக்கு விடிவு சாத்தியமே.



புத்தனின் போதிமரத்தில் தொங்கும் உடல்கள்!
- வித்தகக் கவிஞர் ப. விஜய்


இந்தியா வித்தியாசமான நாடு!
உள்நாட்டுத் தொழிலாளர்களைப்
பிச்சைக் காரர்களாக்கும்!
வெளிநாட்டு முதலாளிகளைப்
பணக்காரர்கள் ஆக்கும்!

அமெரிக்கா விவரமான நாடு!
வெளிநாட்டு தொழிலாளர்களை
பிச்சைக் காரர்களாக்கும்!
உள்நாட்டு முதலாளிகளைப்
பணக்காரர்கள் ஆக்கும்!

இலங்கை விபரீதமான நாடு!
சவப்பெட்டிகளை தயாரித்து
சமாதானம் பேசும்!
சமாதானம் பேசிக் கொண்டே
ஏவுகணை வீசும்!

புத்தனின் போதிமரத்தில் - இன்று
செஞ்சோலை சிறுமிகளின்
உடல்கள் தொங்குகின்றன

செஞ்சோலை வளாகத்தின் மேல்
குண்டு வீசிப் பறந்தது
விமானம் அல்ல
சிங்கள ராணுவத்தின்
மானம்!

ஒரு ராணுவம்
எதிரி ராணுவத்தை தாக்கும்!
என்றும் வேவு பார்க்கும்.
ஆனால் அறுபது சிறுமிகளை
அடையாளம் பார்த்துக் கொன்றது ஏன்?

இலங்கை ராணுவம் தெரிந்து வைத்திருக்கிறது
ஈழத்துச் சிறுமிகளுக்கு
பூக்கோலமும் போடத் தெரியும்
போர்க்கோலமும் பூணத் தெரியும்

அவர்களுக்குப்
பல்லாங்குழியும் ஆடத் தெரியும்
பகைவர் தலைகளுக்கு
பிணக்குழியும் தோண்டத் தெரியும்

அவர்களுக்கு
தலைவாரிப் பூச்சூடவும் தெரியும்
எதிரிகளின்
தலைசீவி பந்தாடவும் தெரியும்

படுகளத்தில் ஒப்பாரி ஏன்
சிலபேர் சிலிர்க்கலாம்
இது ஒப்பாரி அல்ல
இழந்த வீராங்கனைகளுக்கொரு
வீரத்தாலாட்டு!

நம் தமிழ் இளைஞர்கள்
வீறு கொண்டவர்கள்
செஞ்சோலையில் விழுந்த ஏவுகணை
நமீதா வீட்டில் விழுந்திருந்தால்
இந்துமகா சமுத்திரத்தை
இங்கிருந்தே தாண்டியிருப்பார்கள்

இருபது மைல் இடைவெளியில்
இங்குள்ள தமிழருக்கும்
ஈழத் தமிழருக்கும்
எத்துனை வித்தியாசம்?

நாம்
குண்டுதுளைக்காத கூண்டில்
தயங்கியபடி நிற்கிறோம்
தேசக் கொடியேற்ற

அவர்கள்
குண்டு துளைப்பதற்காகவே
தயாராக நிற்கிறார்கள்
தமிழ்தேச கொடியேற்ற

நம் குழந்தைகள் கையில்
விளையாடுவதற்காக
பொம்மை துப்பாக்கிகள்

அவர்கள் குழந்தைகள் கையில்
விடுதலை ஆவதற்காக
உண்மை துப்பாக்கிகள்

நமக்கு
குளிர்பானத்தில் விஷமிருக்கிறது
அவர்களுக்கு
விஷம்தான் குளிர்பானமாக இருக்கிறது!

புறநானூற்றை
நாம் வாசிக்கிறோம்
அவர்கள்தான்
எழுதுகிறார்கள்

கலிங்கத்து பரணியை
நாம் படிக்கிறோம்
அவர்கள்தான்
நடத்துகிறார்கள்!

இருபது மைல் இடைவெளியில்
இங்குள்ள தமிழருக்கும்
ஈழத் தமிழருக்கும்
எத்துனை வித்தியாசம்?

தமிழனை
உணர்ச்சிவசப்படுத்துவது வேறு!
தமிழனுக்கு
உணர்ச்சி இருக்கிறது என்று
உணர்த்துவது வேறு!

இரண்டாவது பணியை
இந்த உண்ணாவிரதம் செய்கிறது!
உணர்ச்சி வரும் - ஒரு நாள்
புரட்சி வரும்

(பேரா. சுப. வீரபாண்டியன், தமிழர் பேரவை சார்பில் நடத்திய அஞ்சலி நிகழ்ச்சியில் பாடிய கவிதை)

plz read me

கவிதை எழுதியவர் :::: மீரா
நன்றி: Thamilworld.com
உச்சிமுதல் பாதம் வரை
உன்னுடைய நினைவுகள்
மெச்சிவிட சொல்லுதடா
மேனியும் கூசுதடா
கன்னதில் முத்தமிட்டாய்
கற்பனையில் சத்தமிட்டாய்
கட்டி அனைக்கவே என்
கைகளில் சிக்கவில்லை
பூட்டிவைத்த ஆசைகளை
பத்திரமாய் சேர்த்து வைப்பேன்
பக்குவமாய் சொல்லிவிட
பாவை இவள் ஏங்குகிறேன்
கட்டழகை சொல்லிவிட
கண்ணன் முகம் காணவில்லை
கைபிடிக்கும் நாளை எண்ணி
காதலில் தான் வாழுகிறேன்

Anna Hazare

தலையங்கம்
தலையங்கம்: சட்டமல்ல, கண்துடைப்பு!
First Published : 29 Jul 2011 01:48:04 AM IST

Last Updated : 29 Jul 2011 05:01:29 AM IST
கடந்த 44 ஆண்டுகளாகக் காலதாமதம் செய்யப்பட்ட லோக்பால் மசோதா இப்போது அமைச்சரவைக் கூட்டத்தில் ஏற்கப்பட்டு, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் முதல் இரு நாள்களுக்குள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஒரு வகையில் இது மனநிறைவு தந்தாலும், சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தலைமையிலான மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்த பல கருத்துகள் ஏற்கப்படவில்லை என்பது நெருடலாகவே இருக்கிறது.
சமூக ஆர்வலர்கள் குழு தெரிவித்த கருத்துகள் ஏற்கப்படப்போவதில்லை என்றால் எதற்காக அவர்களை வரைவு மசோதா குழுவில் சேர்த்துக்கொண்டு பலமுறை பேச்சு நடத்த வேண்டும்? பேச்சுகளை விடியோவில் பதிவு செய்யவேண்டும்? இல்லாத நாடகமெல்லாம் நடிக்கப்பட வேண்டும்? என்ற கேள்விக்கு நமக்குக் கிடைக்கும் விடை- திருவிழாவில் விலைஅதிகமான பொருளைக் கேட்டு அழுகின்ற குழந்தைக்கு பஞ்சுமிட்டாய் கொடுத்து ஏமாற்றிவிடுவதைப் போல, மக்கள் பிரதிநிதிகளையும் ஏமாற்றிவிட்டது மத்திய அரசு என்பதுதான் இதிலிருந்து தெரிகிறது.
அரசு தயாரித்த வரைவு மசோதா மட்டுமே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டபோதே, அண்ணா ஹசாரே ஆதரவாளர்கள் நடுவே வருத்தம் மேலிட்டது. அதே வருத்தம் இப்போதும் தொடர்கிறது. ""அடித்தட்டு மக்களுக்கு (ஆம் ஆத்மி) எதிரான ஊழல்களை ஒழிக்கும் நடவடிக்கைகளையும் இந்த லோக்பால் கொண்டிருக்கும் என்று உண்மையாக நம்பிக்கொண்டிருந்தேன்'' என்று வேதனைப்பட்டுள்ளார் அண்ணா ஹசாரே.
இதற்காக அவர்கள் வருத்தப்படத் தேவையில்லை. அண்ணா ஹசாரே போன்றவர்கள் இந்த விவகாரத்தில் காட்டிய அபரிமிதமான ஆர்வமும் அவர்கள் நடத்திய போராட்டங்களும் இல்லையென்றால், லோக்பால் தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டிருக்கும். இந்த அளவுக்காவது முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றால் அந்தப் பெருமை அண்ணா ஹசாரே குழுவையே சேரும்.
"பிரதமர் பதவியை இந்தச் சட்ட வரையறைக்குள் கொண்டு வருவதற்குத் தான் எதிராக இல்லை' என்று முன்னர் தெரிவித்ததைப்போலவே, பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவைக் கூட்டத்திலும் தெரிவித்ததாகவும், ஆனால், அதை அமைச்சரவை ஏற்க மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. பதவியில் இருக்கும்போது பிரதமர் மீது லோக்பால் நடவடிக்கை கூடாது என்பது ஏற்கப்படக்கூடியதே என்றாலும், இதே அளவுகோலை நீதிபதிகளுக்கும், நாடாளுமன்ற வளாகத்துக்குள் உறுப்பினர்கள் நடவடிக்கைக்கும் நீட்டிக்க வேண்டும் என்பதிலும் தவறு காண முடியாது.
நாம் ஒரு விஷயத்தை நன்றாக மனதில் இருத்திக்கொள்ள வேண்டும். நமது நாடாளுமன்ற உறுப்பினர்களின் தரம் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை என்றால் அது அவர்களைத் தேர்ந்தெடுத்த நமது குற்றம்தானே? எந்தக் காரணத்தைக் கொண்டும் எந்த ஓர் அமைப்பும் நாடாளுமன்றத்தைவிட உயர்ந்ததாக இருப்பது மக்களாட்சித் தத்துவத்துக்கு எதிரானது.
இந்த மசோதா நிறைவேறிய பின்னர், லோக்ஆயுக்த வரம்புக்குள் மாநில முதல்வர் பதவி இடம்பெறாமல் போகும் நிலைமை எல்லா மாநிலங்களிலும் உருவாகும் என்று முன்னாள் காவல்துறை அதிகாரி கிரண்பேடி தெரிவித்துள்ளார். அவரது எச்சரிக்கையில் அர்த்தம் இருக்கிறது. குறிப்பாக, இப்போது கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா மீது கர்நாடக மாநில லோக்ஆயுக்த கூறியுள்ள குற்றச்சாட்டுகள் முதல்வர் பதவிக்கே உலைவைத்துள்ள நிலையில், வேறு எந்த மாநில முதல்வரும் இந்தச் சட்ட வரம்புக்குள் இடம்பெறுவதை விரும்ப மாட்டார். பிரதமருக்கு அளிக்கப்படும் விதிவிலக்கு முதல்வர்களுக்குத் தரப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதுதான் நமது கருத்து.
லோக்பால் சட்டத்தில் ஊழல் குற்றச்சாட்டை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நாளிலிருந்து ஏழு ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்கின்ற விதிமுறை இந்தச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யப் போதுமானது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊழலை விஞ்சும் ஊழல்கள் அம்பலப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஓர் ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க அதிகபட்சம் 7 ஆண்டுகள் காலஅவகாசம் அளிப்பதன் மூலம், குற்றம் சாட்டப்பட்டவர் அனைத்துச் சாட்சிகளையும் கலைத்துவிடுவார் என்பது மட்டுமல்ல, அனைத்துச் சாட்சிகளும் மாயமாய் மறைந்துபோய் விசாரணையே நீர்த்துப்போகக் கூடும்.
மேலும், இந்த லோக்பால் உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் மட்டுமே. ஆனால், விசாரணை வரம்பு 7 ஆண்டுகள். இந்த அளவுக்கு நீண்ட காலஅவகாசம் முறைகேடுகளில் போய் முடியும். நேர்மையுடன், அநீதிக்கு வளையாமல் நிற்கும் உறுப்பினர்கள் பதவிக்காலம் முடிந்து வெளியேறும் வரை காத்திருந்து, பிறகு சாதகமான சூழலில் சாதகமான தீர்ப்பைப்பெற குற்றவாளிக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்துகிறது இந்த விதிமுறை.
மேலும் இந்த அமைப்பு தனக்குள் பாதி உறுப்பினர்களை நீதிபதிகளாகக் கொண்டிருந்தபோதிலும்கூட, இதற்கு வழக்குப் பதிவு செய்யும் (பிராசிக்யூட்) அதிகாரம் இல்லை. விசாரணை செய்து உச்ச நீதிமன்றத்துக்குப் பரிந்துரைக்க மட்டுமே அதிகாரம் உள்ளது. மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் சில ஆண்டுகளுக்கு வழக்கு நடக்கும். "தெய்வம் நின்று கொல்லும்' என்பதற்காக, சட்டமும் நிதானமாகத்தான் தண்டிக்கும் என்றால், மக்கள் அச்சட்டத்தின் மீது எப்படி நம்பிக்கை கொள்வார்கள்?
கர்நாடக லோக்ஆயுக்த தலைவரும் லோக்பால் வரைவு மசோதா குழுவில் இடம்பெற்றவருமான சந்தோஷ் ஹெக்டே தன் கருத்தைத் தெரிவிக்கையில், ""44 ஆண்டுகளுக்குப் பிறகு கொண்டு வருகிறார்கள். ஆனால், வலுவாகக் கொண்டுவரவில்லை'' என்று கூறியுள்ளது இதைக் கருத்தில்கொண்டுதானோ என்னவோ?
"ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முந்தைய ஆட்சிக் காலத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்தினோம். இப்போது லோக்பால் கொண்டுவந்துள்ளோம்' என்று காங்கிரஸ் தலைவர்கள் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அரசும் அதிகாரிகளும் கடந்த மூன்று ஆண்டுகளில் மெல்லமெல்ல வலுவிழக்கச் செய்துவிட்டார்கள். இப்போது அதிகாரிகள் இதைக் கண்டு அஞ்சுவதே இல்லை. கேட்ட தகவலைக் கொடுப்பதும் இல்லை.
இதே நிலையை லோக்பால் சந்திக்காமல் இருக்க வேண்டும் என்றால் லோக்பால் மசோதாவில் பல திருத்தங்கள் செய்யப்பட்டு அது சக்திவாய்ந்த அமைப்பாகச் செயல்பட வழிகோல வேண்டும். அதைவிட்டு விட்டு அவசரக்கோலத்தில் இப்படி ஒரு சட்டம் கொண்டுவருவதைவிடப் பேசாமலேகூட இருந்துவிடலாம்!